பள்ளி மாணவர்களிடையே திருக்குறள் விழிப்புணர்வு!- அசத்தும் கிராமத்து விவசாயி


மக்களின் பசியாற்றும் வேளாண்மையில் ஈடுபடுவதேமிகப் பெரிய சேவை. பார் போற்றும் உழவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளதடன், 1,330 திருக்குறள்களைக் கற்று,  பள்ளி மாணவர்களுக்கு கற்பித்துவருகிறார் நாமக்கல்லைச் சேர்ந்த விவசாயி கே.ராசாக்கவுண்டர். நாமக்கல் அருகேயுள்ள மரூர்பட்டியைச் சேர்ந்த இவர், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். உழவையே தொழிலாககொண்டுள்ள இவர், ஓய்வு நேரங்களில் அருகேயுள்ள பள்ளிகளுக்குச்  சென்று, மாணவர்கள் மத்தியில் திருக்குறள் ஒப்புவிப்பதுடன், அதுகுறித்த விழிப்புணர்வையும்  ஏற்படுத்தி வருகிறார்.இதுவரை 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குசென்று, திருக்குறள் ஒப்புவித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ள ராசாக்கவுண்டர், கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகங்களைப் பரிசாக வழங்கியும்  ஊக்குவித்து வருகிறார்.
திருக்குறள் திலகம்
இவரது சேவையைப் பாராட்டி, மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி, பல்வேறு  அமைப்புகளும் விருது வழங்கி கவுரவித்துள்ளன. ‘திருக்குறள் திலகம்’ என்ற பட்டமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரது பெயரான ராசாக்கவுண்டரே மறைந்து, `திருக்குறள் திலகம்` என்ற பெயரிலேயே  அழைக்கப்பட்டு வருகிறார் இவர்.
"திருக்குறள் மீது எப்படி ஏற்பட்டது ஆர்வம்? பள்ளி மாணவர்களிடம் திருக்குறளை ஒப்புவிப்பது ஏன்?" என்ற கேள்விகளுடன், ராசாக்கவுண்டரை, மன்னிக்கவும், `திருக்குறள் திலகத்தை` தேடிச் சென்றோம்.
"பள்ளிக் கல்வியுடன் படிப்பை நிறுத்திவிட்டு, விவசாயம் மேற்கொண்டு வருகிறேன். மகன்,மகள் இருவரும் பள்ளியில் படிக்கும் சமயத்தில்,அவர்களுடன் அமர்ந்து பாடங்களை கவனிப்பேன். அந்த சமயத்தில், திருக்குறளைப் படிக்கத் தொடங்கினேன்.  ஒரு கட்டத்தில் அவற்றை மனப்பாடம் செய்யும் ஆர்வம் ஏற்பட்டதால், மனப்பாடம் செய்யத்  தொடங்கினேன்.
திருக்குறள் படிக்கத் தொடங்கியபோது  எனக்கு வயது 43. 2005-ல் இந்த முயற்சியைத் தொடங்கினேன். ஏறத்தாழ 6 ஆண்டுகள் தொடர் முயற்சியால், 2011-ல் 133 அதிகாரத்தில் உள்ள 1,330 குறள்களையும் மனப்பாடம் செய்தேன்.  இவற்றை எனது மகன், மகளிடம் ஒப்புவித்துக்  காண்பிப்பேன்.
வரிசையாக மட்டுமின்றி, குறளின் எண்ணைக்  கூறினால், அந்தக் குறளை விளக்கத்துடன் கூறுவேன். அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என 3 பாகங்களாக உள்ள திருக்குறளில், வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் உள்ளன. எனவே, திருக்குறளின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தேன்.
முதலில் எனது கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களிடையே திருக்குறளை ஒப்புவித்து, அதற்கான பொருளை விளக்கினேன். பின்னர், படிப்படியாக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று, தலைமை ஆசிரியர்களின் அனுமதியுடன், திருக்குறள் ஒப்புவித்து வருகிறேன். இதற்காக அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
உழவுப் பணிகளை முடித்துவிட்டு, ஓய்வு நேரத்தில் இந்தப் பணியை மேற்கொள்கிறேன். எனது மகளை சென்னையில் உள்ள கல்லுாரியில் சேர்க்கச் சென்றிருந்த சமயத்தில், சைதாப்பேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் திருக்குறளை ஒப்புவித்து, அதைப் படிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினேன்.  நாமக்கல், திருச்சி மாவட்டங்களில், மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுமதியுடன் 120-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் திருக்குறள் ஒப்புவித்துள்ளேன். பள்ளிகளுக்குச் செல்லும்போது, கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகமும் பரிசாக வழங்கி வருகிறேன்.
திருக்குறள் மூலம், லேனா தமிழ்வாணன், கவிதாசன், சுகிசிவம் போன்ற பிரபலங்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. திருக்குறள் ஒப்புவித்தலைக் கேட்டு 'திருக்குறள் திலகம்', 'முப்பால் காவலர்' போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. திருக்குறளை படிப்பதன் அவசியத்தை மாணவர்களிடம் ஏற்படுத்துவதே எனது நோக்கம்" என்றார் உறுதியுடன்

Share this

0 Comment to "பள்ளி மாணவர்களிடையே திருக்குறள் விழிப்புணர்வு!- அசத்தும் கிராமத்து விவசாயி"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...