Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ் மொழி கற்கும் சீனர்கள்!

கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர்
வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது போன்ற காணொளிகளும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

 இவற்றை பார்க்கும் இணைய பயன்பாட்டாளர்களுக்கு ஆச்சர்யம் மட்டுமின்றி, அவர்களது பின்னணி குறித்த பல்வேறு கேள்விகளும் எழுகின்றன. எனவே, இந்த காணொளி/ புகைப்படங்களை வெளியிட்டு வரும் சீனாவின் யுன்னான் மின்சு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் துறையை தொடர்பு கொண்டு பிபிசி தமிழ் பேசியது. "சீன அரசு தமிழை ஊக்குவிக்கிறது" சீனாவிலுள்ள யுனான் மாநிலத்திலுள்ள யுனான் மின்சு பல்கலைக்கழகத்தின் தெற்காசிய மொழிகள் மற்றும் கலாசார கல்லூரியில் வங்காளம், நேபாளி, சிங்களம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளுக்கான துறைகள் தனித்தனியே செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அங்கு 2017ஆம் ஆண்டு தமிழ் துறை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு, கடந்தாண்டு ஆண்டு மார்ச் முதல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
யுன்னான் மின்சு பல்கலைக்கழக தமிழ் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதன் ஒருங்கிணைப்பாளரும், துணைப் பேராசிரியருமான நிறைமதியிடம் (சீனப் பெயர் கிகி ஜாங்) கேட்டபோது, "நாங்கள் தமிழ் மொழியில் நான்காண்டுகள் இளங்கலை பட்டப் படிப்பை வழங்கி வருகிறோம். தமிழ் மொழி குறித்த அறிமுகமே இல்லாத ஆறு சீன மாணவர்கள் தற்போது படித்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலாமாண்டு அடிப்படை படிப்பு, பேச்சு, எழுத்து குறித்தும், அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழர்களின் இலக்கியம், கலாசாரம், பண்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பியல்புகளையும் சொல்லித் தருகிறோம்" என்று கூறுகிறார். இந்த படிப்பில் சேருவதற்கான அடிப்படை தகுதி என்ன? உதவித்தொகை ஏதாவது வழங்கப்படுகிறதா? என்று கேட்டபோது, "இந்த படிப்பிற்கு சீனாவை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
முதற்கட்ட நுழைவுத் தேர்வுக்கு பிறகு தமிழை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தவர்களிடம் அதற்குரிய காரணங்களை கேட்டறிந்துவிட்டு தகுதியான மாணவர்களை தேர்வு செய்கிறோம். தமிழை படிக்கும் மாணவர்களையும், என் போன்ற ஆசிரியர்களையும் ஊக்குவிக்கும் சீன அரசு குறிப்பிடத்தக்க அளவில் உதவித்தொகைளையும் வழங்குகிறது" என்று நிறைமதி கூறுகிறார். "நாங்கள் ஏன் தமிழ் கற்கிறோம்?" சீனர்கள் தமிழ் படிப்பதற்கான காரணம் என்ன? இது சீன அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டமா? தமிழை படித்துவிட்டு இவர்கள் என்ன செய்வார்கள்? உள்ளிட்ட சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் முன்வைக்கும் பல்வேறு கேள்விகளை நிறைமதியிடம் கேட்டதற்கு, "தமிழ் மொழிக்கும் சீனாவிற்கும் பல நூற்றாண்டுகளாக நெருங்கிய தொடர்பு உள்ளது.
அதுமட்டுமின்றி, அன்று தொட்டு இன்று வரை வர்த்தகத்தில் சிறந்த நண்பர்களாக திகழ்ந்து வருகிறோம். இதை கலை, விளையாட்டு, கல்வி போன்றவற்றிற்கும் விரிவுபடுத்துவதற்கு சீனா விரும்புகிறது. அதுமட்டுமின்றி, பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடாக விளங்கும் இந்தியாவை முழுவதுமாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு தென்னிந்தியாவை அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டை புரிந்துகொள்வது அவசியம் என்பதால் நாங்கள் தமிழ் மொழியையும், அதன் கலாசாரம், இலக்கியம், கலைகள் உள்ளிட்டவைகள் குறித்து தெரிந்துகொள்வதற்கு முயற்சித்து வருவதன் ஒருபடியே இது. எனவே, எங்களது மாணவர்கள் தமிழ் மொழியை மட்டுமின்றி அதன் சிறப்பியல்புகள் குறித்து முழுவதும் தெரிந்து கொள்ளும் விதமாக அவர்களது மூன்றாமாண்டு படிப்பை முழுவதும் தமிழகத்தில் கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு விரைவில் தமிழ்நாட்டு பல்கலைக்கழங்களுடன் ஆசிரியர்-மாணவர் பரிமாற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளோம்" என்று விவரிக்கிறார்.
 "247 எழுத்துகளை பார்த்து பயந்துவிட்டேன்" முற்றிலும் தமிழ் மொழியின் அறிமுகமே இல்லாத சீன மாணவர்கள் படிப்பை தொடங்கிய சில மாதங்களிலேயே மொழியை ஆர்வத்துடன் கற்று கொண்டதுடன், தங்களது எண்ணங்களை அழகான கையெழுத்தில் தமிழிலேயே எழுதுவதாக தெரிவித்து இந்த துறையின் சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படங்களும், காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலான பாராட்டை பெறுவதை பார்க்க முடிகிறது. இதுகுறித்து, அங்கு பயிலும் மாணவர் மகிழனிடம் கேட்டபோது, "முதலில் தமிழை புரிந்துகொள்வது மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக தமிழ் மொழியில் 247 எழுத்துகள் உள்ளதை கண்டு மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், தமிழை தொடர்ந்து படித்து, படித்து அதனால் ஈர்க்கப்பட்டு விட்டேன். பொங்கல் விழா கொண்டாடுதல், தமிழ் உணவு சாப்பிடுதல், தமிழ் திரைப்படங்களை ரசித்தல் முதலியவற்றின் மூலம் தமிழர்களின் கலாசாரத்தை புரிந்துகொள்வதற்கும், தமிழ் மொழியை மேலும் ஆர்வமாகவும் ஆழமாகவும் கற்றுக்கொள்வதற்கும் உதவுகிறது" என்று அவர் கூறுகிறார். இந்தி தெரியாததால் வெளிநாடு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட தமிழ் இளைஞர்- நடந்தது என்ன? தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது. தமிழ் மொழியை கற்றுக்கொள்வது கடினமாக இருந்தாலும், அதை ஈடுபாட்டுடன் கற்றுக்கொண்டு, தமிழர்களுடன் செம்மையாக உரையாடல் நடத்த விரும்புகிறேன்" என்று கூறுகிறார் கயல்விழி என்னும் மாணவி.
 படித்த பிறகு என்ன செய்வார்கள்? தமிழ் மொழியின் சிறப்பியல்புகள், தமிழர்களின் வரலாறு, கலாசாரம், பண்பாடு போன்றவற்றையெல்லாம் தவிர்த்து தமிழை படிப்பதால் சீனர்களுக்கு பிரகாசமான வேலைவாய்ப்பு உள்ளதாக உறுதிபட கூறுகிறார் நிறைமதி. "எங்களிடம் நான்காண்டு பட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. உதாரணமாக, சென்னையில் பல்வேறு சீன நிறுவனங்களின் கிளைகளும், தொழிற்சாலைகளும், துணை நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உயரதிகாரிகளாக உள்ள சீனர்களுக்கு மாண்டரின், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளே தெரிந்துள்ளதால் மற்ற பணியாளர்களுடன் இயல்பாக உரையாடுவது கடினமாக உள்ளது. இந்நிலையில், மாண்டரின், ஆங்கிலம் மட்டுமின்றி தமிழும் தெரிந்த சீனர் ஒருவர் இருந்தால் எப்படி இருக்கும் என்ற இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் எங்களது முயற்சி இருக்கும். அதுமட்டுமின்றி, பொதுவாகவே தமிழ் திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் சீனர்களுக்கு பெருந்தடையாக இருந்துவரும் மொழிபெயர்ப்பை மேற்கொள்வதிலும் பணிவாய்ப்புகள் உள்ளன. தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து படித்து,
அதில் ஆராய்ச்சி செய்வதற்கும், எதிர்கால சீனர்களுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்லும் ஆசிரியராகவும் பணிபுரிவதற்கு வாய்ப்புள்ளது" என்று நிறைமதி மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். "நான் பட்டம் பெற்ற பிறகு தமிழ்நாட்டிற்கு சென்று மேலதிக கற்றல்களையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, ஒரு தேர்ந்த தமிழ் ஆசிரியராக விரும்புகிறேன்" என்று கயல்விழி கூறுகிறார். மாணவர் மகிழன் பேசும்போது, "நான் தமிழ்நாட்டில் சில காலம் வாழ்ந்து அங்குள்ள கலாசாரத்தில் முழுமையாக மூழ்க விரும்புகிறேன். வாழ்நாள் முழுவதும் தமிழ் சார்ந்த பணிகளை மேற்கொள்வதுடன், சீன-இந்திய நட்புக்கு ஒரு பாலமாக மாற வேண்டுமென விரும்புகிறேன்" என்று தனது கனவை முழுவதும் தமிழிலேயே விவரிக்கிறார். "தாய்மொழி பாசம் அதிகம்" சீனா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை கற்பதையும், அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படுவதையும் பார்த்து தமிழர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் தமிழ்நாட்டில் தமிழின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது. அதாவது, சமீபத்திய ஆண்டுகளாக பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கழக படிப்புவரை ஆங்கில வழி கல்வியின் தாக்கமே தமிழ்நாட்டில் அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து நிறைமதியிடம் கேட்டபோது, "தமிழர்கள் தங்களது தாய்மொழியின் மீது அதிக பாசம் கொண்டவர்கள் என்பதை நான் நன்கறிவேன்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் ஆங்கில மொழி மீதான மோகத்துக்கு உலகமயமாக்கலே மிக முக்கிய காரணம். இதுபோன்ற தடைக்கற்களை சீன மொழியும் சந்தித்து மீண்டெழுந்து வருகிறது. இருந்தபோதிலும், உலகின் செம்மொழிகளில் முக்கிய மொழியான தமிழை தமிழர்கள் பேணிக்காக்க வேண்டும். தமிழின் அறிமுகமே இல்லாத சீனர்களே தமிழை கற்க முன்வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் தங்களது குழந்தைகளை தமிழ் வழியில் படிக்க வைத்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் மொழியை கொண்டுசெல்ல வேண்டும்" என்று நிறைமதி நிறைவு செய்கிறார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive