தற்காலிக ஆசிரியர் நியமனம்: குழப்பத்தில் கல்வித்துறை

தமிழகத்தில் ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்தை சமாளிக்க தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக கல்வி செயலாளர் பிரதீப் யாதவ் விடுத்துள்ள அறிவிப்பு பல குழப்பங்களை ஏற்படுத்துவதாக சர்ச்சை எழுந்துள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, 3500 தொடக்க பள்ளிகளை மூடும் முடிவை கைவிடுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன., 22 முதல் தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற போராட்டம் நடக்கிறது. ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாததால் 95 சதவீதம் தொடக்க பள்ளிகள் மூடப்பட்டன. இதை தடுக்க 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம்(பி.டி.ஏ.,) நியமித்து கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் பல முரண்பாடுகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.கல்வி அதிகாரிகள் சிலர் கூறியதாவது:இது அரசு உத்தரவு அல்ல. கடிதம் மட்டுமே. உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில் தான் பி.டி.ஏ., அமைப்புகள் உள்ளன. மூடப்பட்ட 95 சதவீதம் தொடக்க பள்ளிகளில் பி.டி.ஏ., அமைப்பு இல்லை. அங்கு 'அன்னையர் குழு' என்ற அமைப்பு தான் உள்ளன. அதில் எவ்வித நிதியும் இல்லை.அதுபோல் ஒரு பள்ளி பி.டி.ஏ., நிதியை மற்ற பள்ளிக்கு வழங்க முடியாது. தவிர, பி.டி.ஏ., சார்பில் நியமனம் பெற்றாலும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் 'நிதி அதிகாரம்' அப்பள்ளி தலைமையாசிரியரிடமே உள்ளது. தலைமையாசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற முரண்பட்ட உத்தரவு, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை மிரட்டுவதாகும், என்றனர்

Share this