++ ஜாக்டோ- ஜியோ போராட்டம்: தடை கோரி இரு நீதிபதிகள் அமர்வில் முறையீடு ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

ஜாக்டோ-ஜியோ அமைப்பின்
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
அதேவேளையில், இதுகுறித்து இரு நீதிபதிகள் அமர்வில் முறையிட அனுமதியளித்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் அரும்பாக்கத்தைச் சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவர் கோகுல் திங்கள்கிழமை தாக்கல் செய்த மனுவில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் 6-ஆம் தேதி முதல் பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வும் மார்ச் 14-ஆம் தேதி முதல் 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வும் தொடங்க உள்ளது. இந்த பொதுத் தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றால் மட்டுமே மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். இந்த நிலையில் ஆசிரியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, அவர்களால் பொதுத் தேர்வுகளை சிறப்பாக எழுத முடியாத நிலை ஏற்படும். எனவே இந்தப் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தான், கொடுத்த மனுவை பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
தள்ளுபடி: இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்துள்ள வழக்கு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் நிலுவையில் உள்ளது.
எனவே இந்த மனுவை விசாரிக்க முடியாது என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் நவீன் மூர்த்தி, மனுவை வாபஸ் பெறுவதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் மனுதாரர் இந்த விவகாரம் தொடர்பாக இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் முறையிட அனுமதியளித்தார்.
முறையீடு: இதனைத் தொடர்ந்து, மனுதாரர் தரப்பு வழக்குரைஞர், நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இந்த மனுவை புதன்கிழமையன்று (ஜன.23) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தனர்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...