அரசு ஊழியர் ,ஆசிரியர்களின் இணைய வழி சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் புதிய திட்டம் துவக்கம்

இணைய வழியில் சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியப் பட்டியல்களை கைப்பட பதிவேட்டில் எழுதி அதனை கருவூலங்களில் சமர்ப்பிக்கும் நடைமுறை இருந்து வருகிறது. இதற்குப் பதிலாக மின் பதிவேடுகளாக மாற்றி சம்பளப் பட்டியல்களை இணைய வழி சமர்ப்பிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளும், மின் பதிவேடுகளாக மாற்றப்படும். அவர்களின் ஊதியப் பட்டியல், பதவி உயர்வு, விடுப்பு மேலாண்மை மற்றும் இதர விவரங்கள் மிக விரைவாகவும், துல்லியமாகவும் பராமரிக்க முடியும்.
இந்தத் திட்டத்தின் துவக்கமாக, அரசு ஊழியர்களின் பணிப்பதிவேட்டில் உள்ள விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு முழுவதுமாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பளப் பணத்தை பெற்று வழங்கும் 23 ஆயிரம் அலுவலர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் தொகுப்புகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் குறித்து 85
ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டம் துவக்கம்: சம்பளப் பட்டியல் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் குறித்த விவரங்களை இணைய வழியில் சமர்ப்பித்து பதிவேற்றம் செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் பழனிசாமி வியாழக்கிழமை துவக்கி வைத்தார். இந்தத் திட்டம் இரண்டு பிரிவுகளாக நடைமுறைப்படுத்தப்படும். முதல் பிரிவில் சேலம், தேனி, விழுப்புரம், ஈரோடு, கரூர், நாமக்கல், கன்னியாகுமரி, விருதுநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், திருப்பூர், சிவகங்கை, திருவாரூர் ஆகிய மாவட்டக் கருவூலங்களிலும், தலைமைச் செயலகம், சென்னை (கிழக்கு, மதுரை, சார் சம்பளக் கணக்கு அலுவலகம் (சென்னை மாநகராட்சி) ஆகிய அலுவலகங்களிலும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இந்த மென்பொருள் செயல்பாட்டையும் முதல்வர் துவக்கி வைத்தார்.
புதுக்கோட்டை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கடலூர், நீலகிரி, நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தருமபுரி, வேலூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டக் கருவூலகங்கள், சார் சம்பளக் கணக்கு அலுவலகம் (புதுதில்லி), சம்பளக் கணக்கு அலுவலகம் (சென்னை-வடக்கு), சென்னை தெற்கு, உயர் நீதிமன்றம், சென்னை, உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Share this

0 Comment to "அரசு ஊழியர் ,ஆசிரியர்களின் இணைய வழி சம்பளப் பட்டியல் தாக்கல் செய்யும் புதிய திட்டம் துவக்கம் "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...