தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதி பெறக்கூடிய தொடக்கப் பள்ளிகள், உயர்
நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளின் ஒட்டு மொத்த ஆசிரியர்களும் ஜாக்டோ
ஜியோ இன்று தொடங்கியுள்ள போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ளதன்
பின்னணியில் இருப்பது மத்திய அரசின் புதிய திட்டம்தான் என்கின்றனர்
போராட்டக்களத்தில் இருப்பவர்கள்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்தக் கோரியும், ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்றும், 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ போராட்டம் இன்று (ஜனவரி 22) தொடங்கியுள்ளது. வழக்கமான போராட்டங்களில் பெரும்பாலும் தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், இன்று தொடங்கியுள்ள போராட்டத்தில் நிலைமை மாறாக உள்ளது. இதன் காரணமாக, 70% சதவிகிதம் தொடக்கப்பள்ளிகள் பூட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சுமார் 36,000 அரசு தொடக்கப்பள்ளிகள் மற்றும் அரசு நிதி பெறக்கூடிய தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் வேலை செய்யும் ஆசிரியர்கள் எண்ணிக்கை சுமார் 1.25 லட்சம் ஆகும். மேல் நிலைப் பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை 2,700. இதில் அரசு நிதி பெறக்கூடிய பள்ளிகள் 750. இவற்றில் சுமார் 27,000 பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நாளை (ஜனவரி 23) முதல் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு (ரிவிஷன் டெஸ்ட்) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 26ஆம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்த சூழலில் தான் ஜாக்டோ ஜியோ போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இன்று காலை முதல் தலைமைச்செயலகமும், டிஜிபி அலுவலகமும் பரபரப்பாக இயங்கி வருகின்றன. பெரும்பாலான காவல் துறை அதிகாரிகளின் தொலைபேசி, செல்போன் எண்கள் எல்லாமே பிஸியாக இருந்து வருகின்றன. மூடப்பட்ட பள்ளிகள் பட்டியல் பற்றி, உளவுத் துறை சார்பில் அரசுக்கு ஒரு ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர கல்வித் துறையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களும் இன்னொரு பட்டியலைத் தந்திருக்கின்றன.
“10 பள்ளிகள் மூடிட்டாங்க, 50 பள்ளிகள் மூடிட்டாங்க, 100 பள்ளிகள் மூடிட்டாங்க” என்று அரை மணி நேரத்துக்கு ஒருமுறை உளவுத் துறையினர் மாவட்டந்தோறும் தகவல் கொடுத்து வந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் எண்ணிக்கையும் ஏறத் தொடங்க, தமிழக முதல்வரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் டென்ஷன் ஆனதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் இது பற்றிக் கேட்டோம். “இந்தப் போராட்டத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் தான் தீவிரமாக உள்ளனர். அதற்கான காரணம், 2019 ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் உள்ள பால்வாடிகளில் எல்கேஜி துவங்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 2,051 பால்வாடிகளில் எல்கேஜி துவங்கத் திட்டமிட்டுள்ளனர். அடுத்த கட்டமாக, மீதமுள்ள பால்வாடிகளில் எல்கேஜி துவங்கப் போகிறார்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதற்கு மாண்டிசேரி பாடத்திட்டம் படித்த ஆசிரியர்களை நியமிப்பதற்கு மாறாக, துவக்கப் பள்ளியில் 20 வருடம் சர்வீஸ் உள்ள, தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெறக்கூடியவர்களை மாற்றம் செய்ய நினைக்கிறது அரசு. பதவி இறக்கம் செய்வதுபோல, எல்கேஜி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கச் சொல்கிறது.
எல்கேஜி, யூகேஜி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவில் மாண்டிசேரி பாடத்திட்டங்களைப் படித்த அனுபவமுள்ள சுமார் 50,000 ஆசிரியர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்களை நியமிக்காமல், எங்களை நியமிப்பது என்ன நியாயம்?” என்று கேள்வி எழுப்பினர்.
ஏற்கனவே அங்கன்வாடிகளில் பணியாற்றுபவர்கள் என்ன ஆவார்கள் என்று அவர்களிடம் கேட்டோம். “தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான சத்துணவுப் பொறுப்பாளர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதை நிரப்பாமல், அந்தப் பணியிடங்களுக்கு பால்வாடி டீச்சர்களை நிரப்பும் ஆலோசனையில் இருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். 1998ஆம் ஆண்டில் மாவட்ட கல்வித் திட்டம் கொண்டுவந்தனர். 2000ஆவது ஆண்டு முதல் 2010 வரையில் சர்வ சிக்ஷா அபியான் என்ற பெயரில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி என்ற திட்டத்தைக் கொண்டுவந்தனர். இப்போது சமர சிக்ஷா என்ற பெயரில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசு. ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் என்றால் எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை ஒரே காம்பவுண்டுக்குள் தான் இருக்கவேண்டும். அனைத்துக்கும் ஒரே தலைமை ஆசிரியர்தான்” என்று கூறி, தங்களது எதிர்ப்புக்கான காரணத்தை விளக்கினர்.
அதே நேரத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள பாடத்திட்டம் அனைத்தும் மிக அருமையானது என்று கூறினர். “நாங்கள் எம்.எஸ்.சி படித்தபோது வந்த மேக்ஸ் இப்போது 9வது மாணவனுக்கு வந்துள்ளது. நாங்கள் பி.ஏ. படித்தபோது வந்த சோசியல் சயின்ஸ் இப்போது உயர் நிலைப் பள்ளி மாணவர்களுக்கு வந்துள்ளது. இதனை ஆசிரியர்கள் கற்றுக்கொண்டு, மாணவர்களுக்குக் கற்பித்தால் சிபிஎஸ் சிலபஸ் தோற்றுபோயிடும். அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்துவிடும். அதை அமல்படுத்த ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் திராணி இல்லையே” என்று கூறினர்.
தமிழக முதுநிலைப் பள்ளி பட்டதாரிகள் கழகத் தலைவர் கே.பி.ஒ.சுரேஷிடம் இந்த போராட்டம் பற்றிப் பேசினோம். மத்திய, மாநில அரசுகள் ஆசிரியர்களை நசுக்க நினைக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
“ஊதியம் இல்லாமல் உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று சுரண்டுகிறது அரசு. இன்று நடைபெற்ற போராட்டத்தில் 75% பேர் கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றி பெறச் செய்துள்ளனர். எங்கள் போராட்டம் தீவிரமடையுமே தவிர எந்தச் சூழ்நிலையிலும் நீர்த்துப் போகாது” என்றார் அவர்.
அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளருமான சுப்பிரமணியனிடம் போராட்டத்தைப் பற்றிக் கேட்டோம். “ஆசிரியர்கள் கோரிக்கையை முன்வைத்துத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. ஜனவரி 22ஆம் தேதி போராட்டம் நடைபெறுமெறு முன்கூட்டியே அறிவித்தோம். ஆனால் அரசு செவிசாய்க்கவில்லை.
ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் என 210 சங்கங்கள், 7 ½ லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் 75% பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் கோரிக்கைக்குத் தீர்வு இல்லாமல் சமரசத்துக்குப் பேச்சு இல்லை. மாணவர்கள் மீது அக்கறையில்லாத மாநில அரசு, இதுவரையில் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. இந்தப் போராட்டம் நாளடைவில் தீவிரமாகுமே தவிர, குறைய வாய்ப்புகள் இல்லை. ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக, அரசு ஊழியர் சங்கங்களும் களத்தில் இறங்கும். காலதாமதமானால், இது அகில இந்தியப் போராட்டமாகவும் மாறும்” என்றார் சுப்பிரமணியன்.
ஒரே வளாகத்தில் எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரை இடம்பெறும் மத்திய அரசின் புதிய கல்வித் திட்டம் குறித்து, அவரிடம் கேட்டோம். “காமராஜர் ஏழை மக்களுக்கும் கல்வி போய்ச் சேர வேண்டும் என்று கல்விக்கூடங்களைத் திறந்தார். மாணவர்கள் வீட்டிலிருந்து நடந்து வரும் தூரத்தில் அவை இருந்தன. இவர்கள் கொண்டுவரும் திட்டத்தின்படி, ஏழைகளும் கூலி விவசாயிகளின் பிள்ளைகளும் வேன் ஏறி வந்து படிக்க முடியாது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காமல், ஆசிரியர்களைக் குறைத்து நாசம் செய்யக்கூடிய திட்டம் அது” என்று சுப்பிரமணியன் பதிலளித்தார்.
கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர்கள் போராட்டத்தினால் தேர்வுத்தாள் திருத்தும் பணியில் ஏற்பட்ட சிரமங்களை மறக்க முடியாது. அதனால் மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் சர்ச்சை எழுந்தது. தற்போதைய போராட்டம் பொதுத் தேர்வுக்கு முன்னர் விஸ்வரூபமெடுத்து வருகிறது.
தமிழக அரசும் ஆசிரியர்களும் மாணவர்களின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்க வேண்டிய தருணம் இது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...