Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குழந்தைகள் அழுக்காகவில்லையென்றால் விளையாடவில்லை என்றே அர்த்தம்!

கோடை விடுமுறை நாட்கள். காலை எழுந்து கொஞ்ச நேரத்துக்குள்ளாக எனது மகன், ‘போரடிக்குதும்மா’ என்றபடி விளையாடுவதற்காக ‘ஐபேட்’ கேட்டு நச்சரிப்பான். எனது குழந்தைப் பருவ நாட்களை யோசித்துப்பார்த்தேன். வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே பொழுதுகளைப் போக்கிய நாட்கள். மிகச் சாதாரணமான அத்தகைய விளையாட்டுகளெல்லாம் இன்று ‘கிரியேட்டிவிட்டி’ என்று விதந்தோதப்படுகிறது!

 நானும் அண்ணனும் செய்த ‘ராமரின் வில் - அம்பு’, காகிதத்தாளுக்கு நடுவில் குச்சியை ஒட்டிச் செய்த பட்டம் என வெறும் தென்னை விளக்குமாறு குச்சியை வைத்துக்கொண்டு செய்த விளையாட்டுப் பொருட்கள் ஏராளம். ஒத்த வயதுச் சிறுமிகளுடன் செய்த செப்புச் சமையல். இன்றும் நவீன சமையலறை விளையாட்டுப் பொருட்களை வைத்துப் பிள்ளைகள் விளையாடத்தான் செய்கிறார்கள். ஆனால், உண்மையான அரிசியை, உண்மையான செடிகளின் இலைகளைப் பறித்து, தண்ணீரில் போட்டுக் குழம்பு வைத்து சமைத்துச் சாப்பிடும்போது கிட்டிய சுகம், இன்றைய எவ்வளவு நவீனமான செயலிகளிலும் எக்ஸ்பாக்ஸ்களிலும் கிடைக்காதது. தட்டான்களின் பின்னால் திரிந்த காலம் அம்மா உபயோகப்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்த மஞ்சள் டப்பாக்களில் துவாரமிட்டு ட்வைன் நூலைக் கோத்து ‘வாக்கி-டாக்கி’ செய்வோம்.

அண்ணன் ஒரு மூலையில், நான் ஒரு மூலையில். ‘ஹலோ... ஹலோ’தான் அன்று முழுவதும். அதற்கும் முந்தைய பருவத்தில் வீட்டில் கிடைக்கும் துண்டுகளைத் தலையில் கட்டி, மகுடம் சூடிய மன்னராய் நான் அமர்த்தப்படுவேன். அண்ணன் தலையில் இன்னொரு துண்டைக் கட்டிக்கொண்டு நகைச்சுவை செய்தி வாசிக்கும் அமைச்சராகிவிடுவான். எனக்குக் கொடுக்கப்பட்ட வசனம், “அமைச்சரே, இன்று நாட்டில் நடந்த செய்தி என்ன?” அதற்கு அமைச்சர் எழுந்து நின்று, கையில் கற்பனையாக ஓலையைப் பிரித்தவாறு, “மன்னா, இன்று நாட்டில் வாழைப்பழத் தோல் வழுக்கி ஒருவர் விழுந்தார்” என்பான். பீறிட்டுக் கிளம்பும் சிரிப்பு வெடிகள். பள்ளி முடிந்தும் வீட்டுக்குச் செல்லாமல் ஊசித்தட்டானைப் பிடித்து கல்லைத் தூக்கச்செய்தது, மணல், நீர், சேறு, இலைகள், பூக்கள் என இயற்கையைத் தொட்டு விளையாடினோம்.


மதுரை போன்ற சிறு நகர்ப்புறத்தில் வளர்ந்த என்னைப் போன்றவர்களுக்கே இவையெல்லாம் வாய்க்கப்பெற்றிருந்ததென்றால், கிராமத்தில் வளர்ந்தவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. கொஞ்சம் போரடிக்கவிடுங்கள் குழந்தை வளர்ப்பு குறித்த பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் இருக்கின்றன. எல்லோருக்கும் அதன்மீது அக்கறை திரும்பியிருப்பது ஆரோக்கியமான விஷயம்தான். ஆனால், இவையெல்லாம் இன்னதென்று வரையறுப்பவற்றை, எந்தப் பெயரிடுதலும் இல்லாமல் நம்முடைய குழந்தைப் பருவங்களில் நாம் செய்தவைதான். உதாரணமாக, ‘உங்கள் குழந்தைகளைச் சில மணி நேரங்களுக்காகவாவது பொழுதுபோகாமல் இருக்கச்செய்யுங்கள்’ என்கிறார்கள். அதாவது ‘போரடிக்கவிடுங்கள்’. “எப்போதும் டிவி, செல்போன், எழுத்து, படிப்பு என ஏதாவது செய்துகொண்டே, ஏதாவது திட்டமிடப்பட்ட வேலைகளைக் கொடுத்தவண்ணம் இருக்காதீர்கள். ஏனெனில், அவ்வாறு போரடிப்பது அவர்களுக்குள் இருக்கும் படைப்புத் திறனை ஊக்குவிக்கும்” என்கிறார்கள். “கண்ணில் படும் சிறு பொருட்களை வைத்து அவர்களாகவே விளையாட்டுகளை உருவாக்கிக்கொள்ளும்போது குழந்தைகளின் கற்பனைத்திறன் மேம்படும்!” என்கின்றன ஆராய்ச்சி முடிவுகள்.

 “குழந்தைகள் எளிதான சிறு செயல்களில் தங்களை முழுதாய் ஈடுபடுத்தி விளையாடும்போது, அவர்களுக்கு அது புத்துணர்ச்சியையும், இளைப்பாறுதலையும் தருகிறது” என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். இதைத்தான் நாம் இன்று எல்லா விதமான உளவியல் பிரச்சினைகளுக்கும் தீர்வாகக் கேட்கும் ‘மைண்ட்புல்னெஸ்’ (மனதை முழுமையாக ஒரு செயலில் ஈடுபடுத்துதல்) என்கிறோம். உதாரணமாக, சிறுவர்கள் மணலில் வீடு கட்டுவதாகட்டும், மழை நீரில் காகிதக்கப்பல் விடுவதாகட்டும்; தன்னை மறந்து நேரம் போவது அறியாமல் அந்த செயலில் லயித்துச் செய்வார்கள். ‘மைண்ட்புல்னெஸ்’ விளையாட்டுப் பொருட்களாகப் பல்வேறு பணம் பறிக்கும் விஷயங்கள் சந்தைகளில் உலாவருகின்றன. மேலும், “போர்ச்சூழலில் வளரும் குழந்தைகளின் மனநிலையை ஆராய்ந்தபோது, அவர்கள் ஓரிடத்தில் தங்காமல் எப்போதும் பரபரப்பாய், கவனச்சிதறல்களுடன் இருக்கிறார்கள்.

ஆனால், ஆச்சரியம் தரும் விதமாக இதே குணாதிசயங்களுடன் செல்வச் செழிப்பில் தனி அறையில் எண்ணற்ற விளையாட்டுப் பொருட்களோடு வளரும் குழந்தைகளிடமும் காண முடிந்தது” என்று ஒரு கட்டுரையில் படித்தேன். ஐரோப்பாவில் என்ன செய்கிறார்கள்? ஐரோப்பாவில் வாழும் இந்த சில ஆண்டுகளில், என் மகன் பயிலும் பள்ளிகளிலிருந்து அறிந்துகொண்டது இதுதான்: இங்கே நுகர்வுக் கலாச்சாரமும், செயற்கை மின்னணுச் சாதனங்களும் குழந்தைகளை விட்டுவைக்கவில்லையென்றாலும், அவர்களின் கல்வி முறையில் - குறிப்பாக, மழலையர் பள்ளியில் - இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ஒன்று, தொட்டு உணர்தல். இன்னொன்று, பங்களித்தல். அதாவது, எந்த ஒரு பொருளையும் மண்ணை, நீரை, சாப்பாட்டுப் பொருட்களை, கொழுகொழு, நொழுநொழு என்றிருக்கும் பொருட்களை (அது சகதியாக இருந்தாலும் சரி) தொட்டுப் பார்த்து விளையாடவிடுகிறார்கள்.

குழந்தைகள் விளையாடும்போது அவர்கள் அசுத்தம் ஆகவில்லை என்றால், அது விளையாட்டே இல்லை என்றுதான் இங்கே பொருள். அதேபோல, பெரியவர்கள் செய்யும் எல்லா செயல்களிலும் குழந்தைகளைப் பங்கேற்க வைக்கிறார்கள். உதாரணமாக, வெள்ளிக்கிழமைதோறும் குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து சமைத்து மதிய உணவு உண்பார்கள். அனைவரும் சேர்ந்து காய்கறி நறுக்கி சூப் செய்வது, ஒன்றாக மாவு பிசைந்து ‘பீட்ஸா’ செய்வது, பின் அனைத்தையும் ஒழுங்குபடுத்திச் சுத்தம்செய்வது. அதாவது, சிறு வயதில் நாம் செய்த கூட்டாஞ்சோற்றை ஆசிரியர் துணையோடு செய்கிறார்கள். அவ்வளவே! எது எப்படியோ, ரத்தமும் சதையுமான ஓர் அன்பு நிறைந்த இறுகிய அணைப்புக்காக ஒவ்வொரு குழந்தையும் காத்துக்கிடக்கிறது. அவர்கள் கதைக்கும்போது அகலவிரியும் நம் கண்களைத் தேடுகிறது. “ஒவ்வொரு வருடமும் திருவிழாவுக்கு வரும் பல உறவினர்களில் ஒரே ஒரு தாத்தா மட்டும் ஐம்பது காசு என்றும் பாராமல் எப்போதும் பால் ஐஸ் வாங்கித்தருவார்” என இன்றும் என் அம்மா நினைவுகூர்வார்.


வருடங்கள் பல கடந்தாலும் இன்றும் நினைவில் வாழ்கிறார் அந்த இலைக்கடை தாத்தா. குழந்தைப் பருவம் அலாதியானது. எங்கேயோ, எப்போதோ, யாரோ செய்யும் சிறுசிறு செயல்கள் ஒவ்வொரு குழந்தையையும் செதுக்குகிறது. முதன்முதலில் காகிதக்கப்பல் செய்து உடனிருந்து மழைநீரில் விட்ட தாத்தா, தூங்கும் வரை வள்ளுவன் - வாசுகி கதை சொன்ன ஆச்சி, செருப்பு வாங்க கடைக்குச் செல்லும்போது ஒவ்வொரு செருப்பாய்ப் போட்டுப்பார்த்து நடந்துகாட்டச் சொல்லும் அப்பா, மின்வெட்டு நாட்களில் விடிய விடிய விசிறியால் வீசி வேர்க்காமல் தூங்கவைத்த அம்மா, மாமா வாங்கிக் கொடுத்த குதிரைப் படம் போட்ட அட்டைப் புத்தகம், சித்தியுடன் சேர்ந்து மொட்டைமாடியில் நட்சத்திரங்களை ரசித்தது, நமக்காகவே விடுமுறை நாட்களில் காத்துக்கிடக்கும் அத்தைப் பிள்ளைகள். ஒவ்வொருவரின் நினைவுகளிலும் சின்னஞ்சிறு பருவத்தை சிறுசிறு செயல்களால் சிறப்பாக்கிய நண்பர்கள், உறவுகள் எப்போதும் நிலைத்திருக்கும். விளையாட்டு குழந்தைகளைக் களிப்படையவும் செய்கிறது, இளைப்பாறவும் வைக்கிறது.

 வெவ்வேறு திசைகளில் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்க, விளையாடுவதற்கு ஐபேடைக் கேட்ட என் மகனிடம், மைதா மாவைப் பிசைந்து அவன் கைகளில் கொடுத்தேன். சட்டெனக் குதூகலமடைந்தவனாய், அந்தக் கையளவு மாவுருண்டையில் ‘பீட்ஸா’ கடைவைத்து, அவனுடைய பொம்மைக் கார்களில் ‘டெலிவரி’ செய்து, அரை நாளில் செல்வந்தனாகிப்போனான். கண்கள் மினுங்கக் கூத்தாடினான்! - சுமிதா ராணி,

 தொடர்புக்கு: sumitharani.b@gmail.comஎன் மகன் பயின்ற மழலையர் பள்ளியில், வெள்ளிக்கிழமைதோறும் குழந்தைகளும் ஆசிரியர்களும் சேர்ந்து சமைத்து மதிய உணவு உண்பார்கள். சிறு வயதில் நாம் செய்த கூட்டாஞ்சோற்றை ஆசிரியர் துணையோடு செய்வதுதான் நவீன கல்விமுறை!




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive