தொடக்கக் கல்வி இயக்ககம் சார்பில் வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் மாதந்தோறும் சனிக்கிழமைகளில் ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் சேவைகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதை கருத்தில்கொண்டு இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணிப்பதிவேடு, சிறப்பு நிலை தகுதி, ஊதியப் பலன்கள் மற்றும் மாறுதல் கோரிக்கை தொடர்பான கோரிக்கைகளை ஆசிரியர்களும், பணியாளர்களும் மனுவாக அளிப்பது வழக்கம்.
இந்நிலையில், சில மாவட்டங்களில் குறைதீர்ப்பு முகாம்கள் பெயரளவுக்கு நடத்தப்படுவதாக ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ஆசிரியர்களை ஒருங்கிணைத்து நடத்தாமல் ஒரு பெட்டியை வைத்து அதில் மனுக்களை செலுத்துமாறு அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தினாலும் குறைகளுக்கான தீர்வு உடனடியாக கிடைப்பதில்லை”என தெரிவித்தனர்.
இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்கக அதிகாரிகள் கூறும்போது, “ஆசிரியர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம்கள் மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோர் தலைமையில் அந்தந்த அலுவலகங்களில் நடத்தப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறைதீர்ப்பு முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஐந்து வேலைநாட்களுக்குள் உரிய தீர்வு காணவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் தனியாக ஒரு பதிவேடு பராமரிக்க வேண்டும். இதன் மூலம் ஆசிரியர்களின் குறைகளுக்கு விரைந்து தீர்வு காணப்படும்” என்று தெரிவித்தனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...