Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

படிக்கும் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் விடுப்பு சலுகை கிடைக்கப் பெறுவார்களா? - எழுத்தாளர் மணி கணேசன்

884534 
படிக்கும் பணிபுரியும் பெண்கள் மாதவிடாய் விடுப்பு சலுகை கிடைக்கப் பெறுவார்களா?

- எழுத்தாளர் மணி கணேசன்

தமிழகத்தில் அண்மையில் இளம் பெண்கள் மற்றும் பணிபுரியும் மகளிரால் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளில் பணியாற்றும் பல பெண்கள், கடுமையான மாதவிடாய் கால வலியால் அவதிப்படுவதும், அதனை சமாளித்தபடியே பணியாற்ற வேண்டிய நிலை உள்ளதும் வருந்தத்தக்கது.

 உண்மையில் தமிழகத்தில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் கால விடுப்பு வழங்கும் கொள்கை எதுவும் இதுவரை இல்லாத சூழலே உள்ளது.

எனவே, அனைத்து தரப்பு பெண் பணியாளர்களுக்கும் மாதவிடாய் கால விடுமுறை வழங்குவது குறித்து முடிவு எடுப்பதுடன், கூலி வேலைக்கு செல்பவர்களும் பயன்பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை இருக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரைத்துள்ளதை எளிதில் கடந்து செல்ல முடியாதுஇந்தியாவில் ஒரு சில மாநில அரசுகள் பெண் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளின் பேணும் பொருட்டு மாதவிடாய் கால விடுப்பு (Menstrual Leave) கொள்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது அறியத்தக்கது.

குறிப்பாக, இந்தியாவிலேயே முதன்முதலாக கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் பீகார் மாநில அரசுத்துறை மற்றும் ஒப்பந்தப் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு 2 நாட்கள் சிறப்பு மாதவிடாய் விடுப்பு வழங்கி வருகிறது. அரசு மற்றும் தனியார் துறை (ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற தனியார் நிறுவனங்கள்) இரண்டிலும் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு 1 நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு (ஆண்டுக்கு 12 நாட்கள்) வழங்கும் முறையில் கர்நாடக மாநிலம் நடைமுறைப்படுத்தி அரசு மற்றும் தனியார் துறை என அனைத்துத் துறைகளுக்கும் இந்த விடுப்பை விரிவுபடுத்திய முதல் மாநிலமாக உள்ளது வரவேற்கத்தக்கது.

இதுதவிர, ஒடியா, அரசுத்துறைப் பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு 1 நாள் வீதம் (ஆண்டுக்குக் கூடுதல் தற்செயல் விடுப்பாக) மாதவிடாய் கால விடுப்பாக வழங்கி வருகிறது. 

இதில் ஒருபடி முன்னேறி கேரளம் தம் மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐடிஐ (ITI)-களில் பயிலும் மாணவிகளுக்கு வருகைப் பதிவுச் சலுகையுடன் கூடிய மாதவிடாய் விடுப்பை வழங்கி வருகிறது. மேலும், பெண் பதின்பருவத்தினர் பயிலும் பள்ளிகளுக்கும் இந்த விடுப்பை விரிவுபடுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இத்தகைய சூழலில் கல்வியில் சிறந்த தமிழ்நாடாக விளங்கும் இங்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் மகளிருக்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவியருக்கும் ஊதியத்துடன் கூடிய, வருகைப்பதிவுடன் கூடிய மாதவிடாய் விடுப்பு உரிமையை எதிர்நோக்கி பெண் சமூகம் உள்ளதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து கொள்வது நல்லது. ஏனெனில், தற்போது தமிழ்நாட்டில் ஆளும் புதிய அரசு அமைவதில் 'பெண் பாதுகாப்பு' முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது நோக்கத்தக்கது. 

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் இந்த அரசு தமக்கான அரசாக பாவித்து வருவதைப் பல்வேறு சமூக ஊடகப் பதிவுகள் வழி அறிய முடியும். இந்திய ஒன்றிய அளவில் பெண்கல்விக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்த மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. அதேபோல், பெண்களுக்குச் சொத்துரிமையை முதன்முதலாக வழங்கியதும் இதுவேயாகும். 

மேலும், இந்திய அளவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலைவாய்ப்பில் ஈடுபடும் மாநிலங்களுள் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்களில் சுமார் 43% பேர் தமிழ்நாட்டில்தான் பணியாற்றுகின்றனர் என்று அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது சிந்திக்கத் தக்கது.

இத்தகைய சூழலில், பெண் நலன்கள் காக்கும் மிகச் சிறப்பான முன்னெடுப்புகளில் பல்வேறு பெருமைகளையும் பெருமிதங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்நாடு இதுகுறித்து விரைந்து பெண்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் நல்லதொரு முடிவு எடுக்க வேண்டியது இன்றியமையாதது.

ஆகவே , எதிர்வரும் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அனைத்துவகை அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பாக மாதந்தோறும் ஒரு நாளும் பதின்பருவம் எய்திய பள்ளி மாணவிகளுக்கு வருகைப் பதிவுடன் கூடிய மாதவிடாய் விடுப்பாக மாதந்தோறும் இரண்டு நாள்களும் வழங்கத்தக்க வகையில் தக்க அரசாணை வெளியிட்டு பெண்கள் நல அரசாக இந்த அரசு திகழ வேண்டும் என்பதே மாற்றத்தை விரும்பிய பலரது விருப்பமாகும்.

எழுத்தாளர் மணி கணேசன்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive