பெற்றோர் - மாணவர் குறை தீர்க்க தீர்ப்பாயம் போன்ற அமைப்பை ஏற்படுத்தவும், நாடு முழுவதும் ஒரே பாடதிட்டம் கொண்டுவரவும் அரசு பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மாயமான தனது மகளை ஆஜர்படுத்தக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். விசாரணையின் போது, அந்த மாணவி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தந்தை கண்டிப்பார் என்ற பயத்தில் வீட்டிலிருந்து வெளியேறியதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்த நீதிபதிகள், மாணவர்களின் உளவியல் ரீதியான மன அழுத்தத்திற்கு தீர்வு காணவேண்டும். எனவே, தொழில்நுட்ப கல்வி இயக்குனர் தலைமையிலான குழுவினர் தற்ேபாதைய கல்வி மற்றும் தேர்வு முறை, பெற்றோர்-ஆசிரியர் உறவு, மாணவர்-ஆசிரியர் சந்திக்கும் சவால்கள் மற்றும் பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இதன்படி, அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.விமலா, டி.கிருஷ்ணவள்ளி ஆகியோர் அரசு மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அளித்த உத்தரவு: மாணவர்கள் நல்ல மனநிலையில்தான்  இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய வட்டார அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும். பெற்றோர்-ஆசிரியர் கூட்டங்களில் பங்கேற்காதவர்களின் கருத்துக்கள் மற்றும் குறைகளை தொலைபேசியில் தெரிவிக்கும் நடைமுறையை கொண்டு வர வேண்டும். மாணவர்களின் உடல் நலம், கல்வி திறன் உள்ளிட்ட விபரங்களை பதிவேட்டில் அந்தந்த ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும். நாடு முழுவதும் ஒரே பாடதிட்டத்தை கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலிக்கவேண்டும். மாணவர்களின் கல்வி திறன், மனநிலையை மேம்படுத்த தேவையான வழிகாட்டுதல்களை கையேடாக மாவட்ட நூலகத்தினர் வெளியிட வேண்டும்.

மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் கல்வி முறையை அவ்வப்போது தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்களிடையே வாட்ஸ்அப் குழு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு ஒழுக்கம், நன்னெறி, வழிகாட்டுதல்கள் வழங்க கருத்தரங்குகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வேண்டும். மேல்படிப்பிற்கு வழிகாட்டும் வகையில் ஆண்டுதோறும் கண்காட்சி நடத்த வேண்டும். பாடங்கள், அரசு உதவிகள், விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்டவற்றை மாணவர்கள் சிரமமின்றி அறிந்து கொள்ள ஒருங்கிணைந்த வெப்சைட் ஏற்படுத்த வேண்டும். மாணவர்கள், பெற்றோரின் குறைகள், பரிந்துரைகள், கருத்துக்களை தெரிவிக்க தீர்ப்பாயம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும். எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் மேற்படிப்பிற்கு வழிகாட்டும் பொறுப்பை தலைமை ஆசிரியர்கள் ஏற்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

1 comment:

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments