தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தின் காரணமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.
மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு சம்பளம் ரூ.7000 என கூறப்பட்டிருந்த நிலையில், அதனை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்
தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் பணிக்கு வராத நாட்களில் அவர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்று அரசு தெரிவித்தது. இருப்பினும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்வதால், உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், 25ம் தேதிக்குள் ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்துள்ளனர்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு
இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர், தொடக்க கல்வி இயக்குநர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் நேற்று ஒரு அவசர கடிதம் அனுப்பியுள்ளார். அதன்படி, அந்தந்த பள்ளிகள் இயங்கும் பகுதிகளை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மூலம் தற்காலிக ஆசிரியர்களா நியமிக்க வேண்டும். பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் இல்லாத பள்ளிகள் இருந்தால், அருகில் உள்ள உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் இயங்கும் பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் இந்த பணியை மேற்கொள்ளலாம்.
அவர்களுக்கு பெற்றோர்- ஆசிரியர் சங்கங்கள் மூலம் தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.7500 வழங்க வேண்டும். இந்த வகை தற்காலிக ஆசிரியர்களை பொறுத்தவரையில் தொடக்கப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் நியமித்து பள்ளிகள் அமைதியாக நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு வரவில்லை என்றால், 26ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கி 28ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை வைத்து பள்ளிகளை திறந்து எந்த தடையும் இல்லாமல் பாடங்களை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் மறுப்பு
இதனிடையே பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. பணிக்கு திரும்ப வேண்டும் என்கிற உத்தரவை மீறிய ஆசிரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது தமிழக அரசின் வேலை என்று தெரிவித்த நீதிபதி, பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க இயலாது என்றும் ஆசிரியர்களின் வேலை நிறுத்த நோட்டீசிற்கு தடைவிதிக்கப்படவில்லை எனறும் தெரிவித்தார்.
தொகுப்பு ஊதியத் தொகை அதிகரிப்பு
இந்நிலையில் தற்காலிக ஆசிரியருக்கு அறிவிக்கப்பட்டிருந்த தொகுப்பு ஊதியத் தொகையை பள்ளிக்கல்வித்துறை அதிகரித்துள்ளது. ரூ 7500 ஆக இருந்த தற்காலிக ஆசிரியர் ஊதியம் ரூ 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது. தலைமைச்செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் 28ம் தேதி பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...