மூன்றாம் அலையை ஏற்படுத்துமா ஒமைக்ரான்? உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

 


கடந்த நவம்பர் 25ஆம் தேதி, தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் கரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதுவரை கிட்டத்தட்ட 59 நாடுகளுக்கு பரவியுள்ள இந்த புதிய உருமாறிய கரோனாவை, கவலைக்குரிய வகையாக உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

இதுகுறித்து தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திற்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ரபால் கூறுகையில், "புதிய உருமாறிய கரோனா கண்டறியப்பட்டுள்ளதாலேயே விஷயங்கள் மோசமாகும் என்று அர்த்தமல்ல. இப்போது இருக்கும் சூழலில் நம்மால் எதையும் உறுதியாகக் கூற முடியாது.

இன்னும் இந்த பெருந்தொற்று முடியவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உலகின் மற்ற பகுதிகளில் திடீரென அதிகரிக்கும் கரோனா பாதிப்பு மற்றும் புதிதாகத் தோன்றும் உருமாறிய கரோனா இன்னும் ஆபத்து முடிந்துவிடவில்லை என்பதையே உணர்த்துகிறது. தெற்காசியப் பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகளை நாம் தொடர்ந்து எடுக்க வேண்டும்.

பொதுச் சுகாதாரத்தை மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதேபோல தடுப்பூசி பணிகளை அதிகரிக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும். அதிகப்படியான மாற்றங்களைக் கொண்டிருப்பது, வேகமாகப் பரவுவது ஆகியவை ஒமைக்ரான் கரோனாவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இது கரோனா பொருந்தொற்றின் போக்கையே மாற்றும் ஆபத்து உள்ளது. இது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இப்போது சொல்வது சற்று கடினம் தான். இது குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள அனைத்து நாடுகளிடம் இருந்தும் கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளோம். இதனை வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒமைக்ரான் பரவும் வேகம், தீவிர தன்மை, ஏற்கனவே குணமடைந்தவர்களை மீண்டும் தாக்குமா என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். ஏற்கனவே குணமடைந்தவர்களை ஒமைக்ரான் தாக்க வாய்ப்புள்ளதாகவே தென் ஆப்ரிக்காவிலிருந்து கிடைத்துள்ள தரவுகள் நமக்குக் காட்டுகின்றன.

ஆனால், இன்னும் பல தரவுகள் தேவை. அதேநேரம், டெல்டாவை விட ஒமைக்ரான் லேசான பாதிப்புகளை மட்டுமே ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் இவற்றை உறுதிப்படுத்த நமக்குக் கூடுதல் தரவுகள் தேவை. தற்போதைய சூழலில் வைரஸ் பாதிப்புகள் எங்கு அதிகரிக்கிறதோ அந்த பகுதிகளைக் கண்டறிந்து வைரஸ் பாதிப்பைத் தடுக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றார்.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive