OneZ Quiz App Download

Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

பி.எப். சேமிப்பில் புதிய வாய்ப்புகள்!– ஆர்.வெங்கடேஷ், மூத்த பத்திரிகையாளர்

 
வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் (பி.எப்.) இனிமேல் பணியாளரே நேரடியாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பு திறந்துவிடப்பட்டுள்ளது. நவம்பர் 19 அன்று நடைபெற்ற பி.எப். அறங்காவலர்கள் குழு சந்திப்பில் எடுக்கப்பட்ட பல்வேறு முடிவுகளில் இதுவும் ஒன்று. நான் ரொம்ப ஆண்டுகளாகக் கேட்டு வந்த விஷயம், அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் காதுகளுக்கு எட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.


பி.எப். பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். உங்கள் அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவிகிதமும், அதற்கு இணையான தொகையை உங்கள் நிறுவனமும் வழங்க, அது பி.எப்.பில் சேமிக்கப்படும். இந்தியாவிலேயே அதிகபட்ச பாதுகாப்பான உத்தரவாதமான வட்டியான 8.25 சதவிகிதம் கிடைப்பது பி.எப்.பில்தான். பணியாளரது ஓய்வுக்கால வாழ்க்கைக்கான மிகப் பெரிய ஊன்றுகோல், பி.எப். தொகைதான். அரசுப் பணியாளர்கள், தனியார் துறைப் பணியாளர்கள் என பெரும்பாலோர் பி.எப். இறுதித் தொகையை நம்பியே பல்வேறு கமிட்மென்ட்டுகளைச் செய்து வைத்திருப்பர்.


ஆனால், என்ன தலைகீழாக நின்றாலும், பி.எப். மொத்த சேமிப்புத் தொகையானது வளரவே வளராது. முன்பு ஒருவர் பி.எப். பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றால் அவரது அடிப்படை, டி.ஏ. சம்பள வரம்பு 15 ஆயிரம் என்று இருந்தது. சமீபத்தில்தான் அது 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி, 25 ஆயிரத்தில் 12 சதவிகிதம் 3 ஆயிரம். பணியாளர் தரும் 3 ஆயிரம் என மொத்தம் 6 ஆயிரம் ரூபாய் பி.எப். கணக்கில் சேரும். நிறுவனம் தரும் 3 ஆயிரத்திலும் ஒரு பகுதிதான் பி.எப்.புக்குப் போகும். இன்னொரு பகுதி இ.பி.எஸ். எனப்படும் ஓய்வூதியக் கணக்குக்குப் போகும்.

இந்த நிலையில்தான் மத்திய அரசு 'வாலண்டரி பி.எப்.' என்ற ஒன்றை அறிமுகம் செய்தது. பணியாளர் தன்னுடைய 12 சதவிகிதப் பங்களிப்போடு கூடுதல் தொகை ஒன்றையும் சேர்த்து பி.எப்.புக்கு வழங்க முடியும் என்று சொல்லப்பட்டது. இதில் பெரிய சிக்கல் என்னவென்றால், பல தனியார் நிறுவனங்கள் இந்த வாலண்டரி பி.எப். தொகையைப் பணியாளர் சம்பளத்தில் இருந்து பிடித்து பி.எப்.பில் செலுத்த முன்வரவில்லை. நிர்வாகங்களைப் பொறுத்தவரை இது பெரிய தொந்தரவு, கூடுதல் வேலைச் சுமை என்று ஒத்துழைக்க முன்வரவில்லை. 'சேமித்துக்கொள்ள வேண்டுமென்றால் நீங்களே செய்துகொள்ளுங்கள், எங்கள் தோள்மீது சுமையேற்றாதீர்கள்' என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.


இந்த இடத்தில்தான் என்னைப் போன்றோர் ஒரு கோரிக்கையை முன்வைத்தோம். கூடுதல் பங்களிப்புச் செய்வதற்கு எதற்கு நிறுவனங்கள் வழியாகப் போக வேண்டும்? எல்லாம்தான் ஆன்லைனுக்கு வந்துவிட்டதே. என்.பி.எஸ். தொகையை ஆன்லைனில் செலுத்துவது போன்று, வாலண்டரி பி.எப். தொகையையும் உறுப்பினரே நேரடியாக வழங்க அனுமதி வழங்கலாமே என்று கேட்டு வந்தோம்.

அதுதான் சமீபத்திய பி.எப். அறங்காவலர் கூட்டத்தில் ஏற்கப்பட்டிருக்கிறது. மிக முக்கியமான முன்னேற்றம் இது. தற்போதைய கணக்குகளின்படியே போனால்கூட, பணியாளர் 2.50 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்தால், அதன் வட்டி வருவாய்க்கு வரி கிடையாது. உதாரணமாக, ஒருவர் மாதம் 3 ஆயிரம் என்றால், ஆண்டு ஒன்றுக்கு 36 ஆயிரம் ரூபாய்தான் அவரது அலுவலகம் வழியாகச் செலுத்த முடியும். 2.50 லட்சம் மைனஸ் 36 ஆயிரம் என்றால் மீதம் 2.14 லட்சம் ரூபாய் வரை அவரே நேரடியாகப் பி.எப். வலைத்தளத்தில் போய்த் தன் கணக்கில் சேமிக்க முடியும்.


இப்படிக் கணக்குப் போட்டுப் பாருங்கள். பலருக்கும் 50 வயதுக்குப் பின்னர்தான் பி.எப்.பின் அருமை பெருமையே புரிகிறது. அதுவரை ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பி.எப். தொகையை எடுத்துவிடுவர். ஆனால், 50 வயதுக்குப் பின்னர்தான் ஓய்வுக்காலம் என்ற பெரும்பூதம் கண்ணெதிரே பிரமாண்டமாக எழுந்து நிற்கும். அதை எதிர்கொள்ள பண ஆயுதம் எதையும் உருவாக்கி வைக்கவில்லையே என்று அடிவயிறு கலங்கும்.


இனிமேல் அந்தக் கவலை இல்லை. கடைசி எட்டு அல்லது 10 ஆண்டுகளில் ஒருவர் இதுபோல் ஆண்டு ஒன்றுக்கு வட்டி வரியில்லாமலேயே 2.50 லட்சம் வரை சேமித்து வந்தார் என்றால், அவரது ஓய்வுக்கால கார்பஸ் பெரிய தொகையாக இருக்கும்.

தற்போதைய விதிகளின்படி, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேலும் சேமிக்கலாம். அதற்கும் அனுமதி உண்டு. ஆனால், அந்தத் தொகையானது தனியாகக் கணக்கிடப்பட்டு அதற்குக் கிடைக்கும் 8.25 சதவிகித வட்டியானது வரி விதிப்புக்கு உட்படும். பரவாயில்லை. ஆனாலும், மொத்த கார்பஸ் தொகை சேர்கிறதே, அதுதான் முக்கியம்.


இன்று நமது வாழ்நாள் 80, 90 வயது வரை இருக்கிறது. அதாவது, ஓய்வுபெற்ற பின்னர் 30 ஆண்டுகளேனும் பலரும் வாழ்கிறோம். அதற்குத் தேவையான பணப் பாதுகாப்பை உருவாக்குவது மிக மிக அவசியம். அதில் பி.எப்.தான் அரசு சார்ந்த உத்தரவாதமான திட்டம். அதில் பணியில் இருக்கும் காலத்திலேயே அதிகபட்சக் கண்மறைவான சேமிப்பை உருவாக்கிவிட்டோம் என்றால், பிற்காலத்தில் சிறுகச் சிறுகப் பணம் எடுத்துக்கொள்ளலாம்.


இதே பி.எப். அறங்காவலர் குழுக் கூட்டத்தில், பி.எப்.இல் 'சிஸ்டமேடிக் வித்டிராயல் திட்டம்' என்படும் 'முறையாகப் பணம் எடுக்கும் வாய்ப்பும்' அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மியூச்சுவல் பண்டுகளில் இருப்பது போல், மாதாமாதம் தேவைப்படும் தொகைக்கு ஏற்ப யூனிட்டுகளை விற்பனை செய்து பணத்தை எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகை தொடர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கும். அதேபோன்ற வாய்ப்பை, பி.எப். பணத்துக்கு மத்திய அரசு அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதுவும் வரவேற்கத்தக்க முயற்சி.


நேரடியாக வாலண்டரி பி.எப். வாயிலாக அதிகபட்சப் பணத்தைப் போட்டு கார்ப்பஸை உயர்த்திக்கொண்டு, ஓய்வுக்காலத்தில், 'சிஸ்டமேடிக் வித்டிராயல் திட்டம்' வாயிலாகப் பணத்தை எடுத்துக்கொள்ளவும் முடிந்தால், ஓய்வுக்காலத்தில் பணத்தேவை என்ற மிகப் பெரிய இடரை கொஞ்சம் எளிதாகக் கடந்துவிடலாம் அல்லவா?


இந்த இரண்டு திட்டங்களும் தற்போது பி.எப். அறங்காவலர் குழுவால் அனுமதிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இவை அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டு, அடுத்த ஏப்ரல் மாதத்துக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறேன்.


நினைத்ததே நடக்கிறது. நல்லதே நடக்கட்டும்.


கருத்துகளைப் பகிர: ஆர். வெங்கடேஷ் / 9841053881





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive