செப்டம்பர் 1ஆம் தேதி மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. அப்போது கல்லூரிகளிலும், விடுதிகளிலும் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நேற்று (ஆக.27) அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கல்லூரிகள் திறப்பின்போது தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்துச் சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ''சென்னையில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் என 112 கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் மாநகராட்சி ஆணையர் மூலமாக கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. அத்துடன் முதல்வரின் உத்தரவுக்கு இணங்க தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடர்ந்து நடைபெறும்.
செப்டம்பர் 1ஆம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் கல்லூரிகளுக்குத் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றை ஒழிக்கத் தமிழக முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு உயர் கல்வித்துறை என்றும் உறுதுணையாக இருக்கும்.
கல்லூரி விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் நேரடியாகக் கல்லூரிக்கு வந்துசெல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை எல்லாம் அரசும் கல்லூரியும் இணைந்து மேற்கொள்ளும்'' என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...