தமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டது.
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் அல்லாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதால் வருகின்ற 1ம் தேதி முதல் 9 ,10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகள், அனைத்து கல்லூரிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டுமெனவும் தமிழக அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படுவதால், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதோர் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என்றும் அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை எனவும் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...