கரோனா பரவல் காரணமாக 2020 மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொற்றுக் குறைவால் பிற பணிகளுக்குத் தளர்வு அளிக்கப்பட்டாலும், பள்ளி, கல்லூரிகளைத் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் இருந்துகொண்டே இருக்கிறது.
கரோனா 2-வது அலையால் நேரடி பொதுத்தேர்வை நடத்த முடியாமல் 10, 12-ம் வகுப்புகளுக்குத் தேர்வுகள் ரத்து செய்யப் பட்டன. கல்லூரிகளிலும் நேரடித் தேர்வு தவிர்த்து ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆன்லைன் வகுப்பு, தேர்வு என்ற முறையால் நகர்ப்புறங்களைவிட, கிராமப்புற மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
குறிப்பாகக் கிராமப்புறப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்போன், லேப்டாப், இணைய வசதியைப் பெற முடியாமல் தொடர்ந்து பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுள்ளது. கரோனா அச்சத்தால் கடந்த கல்வியாண்டைத் தொடர்ந்து நடப்புக் கல்வியாண்டிலும் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை தொடர்கிறது. வகுப்பறைகளுக்குச் சென்று, ஆசிரியர்கள், சக மாணவர்களுடன் இணைந்து படிப்பதைக் காட்டிலும் ஆன்லைன் கல்வி பெரிதும் பயன் அளிக்காது என்பதே கல்வியாளர்களின் கருத்தாகவே உள்ளது.
அதேபோல கிராமப்புற மாணவர்களிடம் போதிய செல்போன், லேப்டாப், இணையவசதியில்லாததால், ஆன்லைன் கல்வியில் அவர்கள் அக்கறை செலுத்துவதில்லை. பெற்றோரும் கவலைப்படுவதில்லை. அவர்களே குடும்ப பொருளாதாரச் சூழலால் தங்களது பிள்ளைகளைக் கூலி வேலைக்கு அனுப்பும் சூழலும் அதிகரித்துள்ளது. சிவகாசி உள்ளிட்ட சில இடங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகமாக வேலைக்குச் செல்கின்றனர். மாணவப் பருவத்திலேயே பணத்தைப் பார்க்கும்போது, மதுப்பழக்கம் போன்ற சில தவறான பழக்கத்திற்கு அவர்கள் தள்ளப்படலாம். இதன்மூலம் பள்ளி, கல்லூரிகளில் இடைநிற்றல் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கல்வியாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சிவகாசி முஸ்லிம் பள்ளிகளின் தாளாளர் முகைதீன் அப்துல் காதர் கூறும்போது, ''தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படாமல் தள்ளிப் போனால் குழந்தைத் தொழிலாளர்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. சிவகாசி போன்ற இடங்களில் வெடி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிடுகின்றனர். பொருளாதார இழப்பைச் சந்திக்கும் பெற்றோர் தங்களது பிள்ளைகளை அதில் ஈடுபடுத்த முயல்கின்றனர். கையில் பணத்தைப் பார்க்கும் மாணவப் பருவ இளைஞர்கள் தவறான வழியில் செல்ல அதிக வாய்ப்புள்ளது. பள்ளி, கல்லூரிகளைத் திறப்பது காலத்தின் கட்டாயம் மட்டுமின்றி நாட்டின் எதிர்காலத்தில் அவசியமும் கூட.
மாணவர்களுக்குத் தொற்று பாதிக்கலாம் என்பது உண்மை என்றாலும், 1- 8ஆம் வகுப்பு வரை காலையிலும், பிற்பகலில் 9-12ஆம் வகுப்புகளுக்கும் என, சுழற்சி முறையைப் பின்பற்றி பள்ளி, கல்லூரிகளைத் திறக்கலாம். ஏதாவது ஒரு முறை மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திக்கும்போது, கல்வியில் கவனம் இருக்கும். மாற்றுச் சிந்தனையை மாணவர்கள் தவிர்க்கலாம். இது தொடர்பாக அரசுக்கும் ஆலோசனை தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளோம்'' என்று தெரிவித்தார்.
அரசுக் கல்லூரி முதல்வர் ஒருவர் கூறுகையில், கல்லூரி மாணவர்களைப் பொறுத்தவரையில் தினமும் அவர்களுக்கு கல்லூரிகளுக்கு நேரில் வரவேண்டும். சிவகாசி போன்ற இடங்களில் சுழற்சி வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் ஒருமுறை மட்டுமே பணிக்குச் செல்கின்றனர். இரு முறையிலும் வேலைக்குப் போய் பழக்கப்பட்டால் பெற்றோர் மீண்டும் கல்லூரிக்கு அனுப்பும் வாய்ப்பு குறையும். முன்பெல்லாம் பிளேக், அம்மை போன்ற பழைய நோய்களுக்குக் கல்வி நிறுவனங்களிலேயே தடுப்பூசி போட்டுத் தடுத்துள்ளோம். அதுபோன்று பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, கல்லூரிகளைத் திறப்பது நல்லது.
தற்போது மாணவர்கள் கட்டுப்பாடின்றி நேரத்தைச் செலவழிக்கின்றனர். சுயக்கட்டுப்பாடு, சுயதெளிவு இன்றி தவறான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். கல்லூரிகளுக்கு நேரில் வரும்போது, தங்களை நெறிப்படுத்திக்கொள்ள முடியும். மாணவர்கள் நலன் கருதி, கல்லூரிகளைத் திறப்பதே காலத்தின் அவசியம்'' என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...