கல்லூரி மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் தொடங்க அக்டோபர் 25 கடைசித் தேதி என்று ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கரோனா 2-வது அலையின் தீவிரத்தால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டன. இதனால் கல்லூரிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்போது கரோனா பரவல் குறைந்ததை அடுத்து புதிய கல்வி ஆண்டுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை ஏஐசிடிஇ எனப்படும் அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
'' * 2021- 22ஆம் கல்வியாண்டில் முதலாமாண்டு தவிர்த்த பிற மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்க அக்டோபர் 1 கடைசித் தேதி ஆகும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் வகுப்புகள் தொடங்கும். சம்பந்தப்பட்ட மாணவர்கள் அக்டோபர் 25-ம் தேதி வரை கல்லூரிகளில் சேரலாம்.
* முழுக் கட்டணத்தையும் திருப்பித் தரும் வகையில் தொழில்நுட்பப் படிப்புகளின் இடங்களைத் திரும்பப் பெற அக்டோபர் 20 கடைசித் தேதி ஆகும்.
* முதலாமாண்டு தொழில்நுட்பப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்க அக்டோபர் 25 கடைசித் தேதி ஆகும். நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அக்டோபர் 30-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.
* கரோனா தொற்று நெருக்கடி குறைந்து இயல்பு நிலை திரும்பும் வரை மாணவர்களை முழுக் கல்விக் கட்டணம் செலுத்த நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.
* பெருந்தொற்றுக் காலத்தில் அனைத்து கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் அல்லது இரண்டு முறைகளையும் பின்பற்றி வகுப்புகளைத் தொடங்கலாம்.
* கரோனா காலச் சூழலுக்கு ஏற்றவாறோ அல்லது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சக விதிமுறைகளின்படியோ கல்வி அட்டவணை மாற்றப்படலாம்.
* முன்கூட்டியே அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கையை நடத்தும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
* எனினும் முந்தைய கால அட்டவணையைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்தி, வகுப்புகளைத் தொடங்கிவிட்ட கல்வி நிறுவனங்கள் புதிய முறையைப் பின்பற்ற வேண்டியதில்லை''.
இவ்வாறு ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...