நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப்பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. இந்த நீட் தேர்வை ஆண்டுதோறும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது.
அதன்படி, எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது கடந்த ஜூலை 1-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதியுடன் முடிவடைந்தது. தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் இருந்து எம்பிபிஎஸ் முடித்த மருத்துவர்கள் 2.73 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை என 24 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 339 நகரங்களில் உள்ள 1,111 தேர்வு மையங்களில் முதுநிலை நீட் தேர்வு ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது. முறைகேடுகளைத் தடுக்க தீவிர கண்காணிப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வில் 2,65,980 பேர் பங்கேற்றனர்.
நீட் மறுதேர்வு: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2 தேர்வு மையங்களில் மின் விநியோகத் தடை காரணமாக, 2,445 பேர் தேர்வு எழுதுவதில் பிரச்சினை ஏற்பட்டது. அதனால், மறுதேர்வு நடத்த வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அந்த 2 மையங்களைச் சேர்ந்த தேர்வர்கள் 2,445 பேருக்கு செப்.5-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை செப்.30-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
50 சதவீத இடங்கள் ஒதுக்கீடு: நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்கள், மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்கு மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வுக் குழு (எம்சிசி) ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துகிறது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை தமிழ்நாடு மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துவது குறிப்பிடத்தக்கது.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...