திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் ஆசிரியர்கள் திட்டியதால் இரத்த அழுத்தம் மாத்திரைகளை சாப்பிட்ட 3 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்செங்கம் (மேல்பள்ளிப்பட்டு) பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 3 மாணவிகளை, ஆசிரியர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனவேதனையடைந்த அம்மாணவிகள் மூவரும் அளவுக்கு அதிகமான பிபி (இரத்த அழுத்த) மாத்திரைகளை உட்கொண்டு மயங்கினர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், அவர்களை உடனடியாக செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றது.
அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்றைய சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களிடையேயான உறவு என்பது மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டியதாக இருக்கிறது. ஆசிரியர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் தனக்கு ஏற்பட்ட அவமானமாக கருதும் போக்கு அதிகரித்துள்ளது. இந்த போக்கு காரணமாக ஆசிரியர்கள் படிக்காத குழந்தைகளை, ஒழுங்கீனமான குழந்தைகளை கண்டிக்க முடியாத நிலை இருக்கிறது.
இதற்கு பெற்றோரும் முக்கிய காரணமாக இருக்கிறார்கள். சின்ன சின்ன தோல்வி, ஏக்கம், அவமானம் என எதையும் சந்திக்கவிடாமல், தோல்வியே சந்திக்காமல் வளரும் குழந்தைகள், திடீரென ஏற்படும் நெருக்கடியை அல்லது தோல்வியை சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். செல்லம் கொடுத்து வளர்ப்பது என்பது அந்த குழந்தைகளை அழிப்பதற்கு சமம்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...